சமகாலத்தின் சிறந்த டி20 லெவனை, டி20 கிரிக்கெட்டை மிக நெருக்கமாகவும் உன்னிப்பாகவும் கவனித்துவரும் டாம் மூடி தேர்வு செய்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுகுறித்த உறுதியான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. 

ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் பட்சத்தில், அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளராக நல்ல அனுபவம் கொண்டவருமான டாம் மூடி, தற்கால சிறந்த டி20 லெவனை தேர்வு செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டுடன் நெருக்கமான தொடர்புடையவர் டாம் மூடி. டாம் மூடி, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர். இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

டாம் மூடி, சமகாலத்தின் சிறந்த டி20 லெவனை தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக விராட் கோலியையும் நான்காம் வரிசை வீரராக டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ளார் டாம் மூடி. 

விராட் கோலியை சிறந்த டி20 லெவனில் தேர்வு செய்த டாம் மூடி, அந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸின் நிகோலஸ் பூரானை விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் ஆல்ரவுண்டராகவும் ஆண்ட்ரே ரசலையும் ஸ்பின்னர்களாக சுனில் நரைன் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்த டாம் மூடி, ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரையும் தேர்வு செய்துள்ளார். 

டாம் மூடி தேர்வு செய்த சமகாலத்தின் சிறந்த டி20 லெவன்:
 
ரோஹித் சர்மா(கேப்டன்), டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், நிகோலஸ் பூரான், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க்,  ரஷீத் கான், பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்

12வது வீரர் - ரவீந்திர ஜடேஜா.