இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் மற்றும் கேப்டன்சி பொறுப்பு ஆகிய இரண்டையும் மிகச்சிறப்பாக செய்துவருகிறார். 3 விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பதுடன், அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார். 

விராட் கோலி பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே வெற்றிகரமாக திகழ்கிறார். ஆனால் மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டன்சியும் செய்துகொண்டு, பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி தலைசிறந்த பேட்ஸ்மேனாக தன்னை தக்கவைத்துக்கொள்வதால், அவர் மீதான பணிச்சுமை அதிகம். 

எனவே கோலி, கேப்டன்சி பொறுப்பை ரோஹித்திடம் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும் என்று ஏற்கனவே சில முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் வலியுறுத்திருக்கின்றனர். டி20 அணியின் கேப்டன்சி பொறுப்பை ரோஹித்திடம் வழங்க கோலி முன்வர வேண்டும். அப்படி செய்வது அவர் மீதான பணிச்சுமையை கண்டிப்பாக குறைக்கும் என்பதால், அதை பலரும் வலியுறுத்திவருகின்றனர். 

இந்நிலையில், விராட் கோலி, கேப்டன்சி பொறுப்பை பகிர்ந்துகொள்ள முன்வரவில்லை என்றால் அவரது கெரியரில் 3 ஆண்டுகள் குறையும் என்று டாம் மூடி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள டாம் மூடி, கோலி கேப்டன்சியை பகிர வேண்டியது அவசியம். நான் இப்படி வலியுறுத்துவதற்கு காரணம், கோலி நீண்டகாலம் கிரிக்கெட் ஆடவேண்டும் என்பதற்காகத்தான். விராட் கோலி சூப்பர் ஸ்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவரது செயல்பாட்டை பார்க்கவே அருமையாக இருக்கும். 

3 விதமான போட்டிகளுக்கான அணியையும் வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அவர் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கும். அவர் 3 விதமான அணிக்கும் கேப்டன்சி செய்வதை தொடர்வாரேயானால், அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் 2-3 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.