இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடிவரும் இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. அதன்பின்னர் இந்த மாதத்திலேயே நியூசிலாந்துக்கு செல்கிறது இந்திய அணி. 

நியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு மிகப்பெரியது. ஜனவரி 24ம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள் தொடங்குகின்றன. நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது. 

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான டாம் லேதம் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் லபுஷேனின் கேட்ச்சை பிடிக்க முயன்றபோது, டாம் லேதமிற்கு வலது கை சுண்டு விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், காயம் குணமாக குறைந்தது 4 வாரங்கள் ஆகும் என்பதால், அதுவரை அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டதால், ஜனவரி 24ம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை டி20 போட்டிகள் நடக்கின்றன. எனவே அதிலிருந்து டாம் லேதம் விலகியுள்ளார்.

டாம் லேதம் சிறந்த அதிரடி வீரர். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக அபாரமாக ஆடி நல்ல ஸ்கோர் செய்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு பெரிய இழப்பு. அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில், டிரெண்ட் போல்ட்டின் கையில் காயம் ஏற்பட்டதால், அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவரும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவது சந்தேகம் என தெரிகிறது.