பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால் 8 ஓவர்களாக குறைத்து நடத்தப்படுகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியில், கேப்டன் கிறிஸ் லின்னும் டாம் பாண்ட்டனும் தொடக்க வீரர்களாக இறங்கினர். 8 ஓவர்கள் போட்டி என்பதால் முதல் பந்திலிருந்தே லின்னும் பாண்ட்டனும் அடித்து ஆடினர். 

டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த இரண்டு பந்தில் இரண்டு பவுண்டரியும் விளாசினார் பாண்ட்டன். அடுத்த மூன்று பந்தில் நான்கு ரன்கள் அடிக்கப்பட்டன. எனவே மொத்தமாக அந்த ஓவரில் 18 ரன்கள். கிறிஸ் மோரிஸ் வீசிய இரண்டாவது ஓவரில் கிறிஸ் லின், 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். 

கிறிஸ் க்ரீன் மூன்றாவது ஓவரை நன்றாக வீசி, அந்த ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையே. அர்ஜூன் நாயர் வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் அடிக்காத டாம் பாண்ட்டன், அடுத்த ஐந்து பந்துகளிலும் சிக்ஸர் விளாசினார். ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களுடன் 30 ரன்களை விளாசிய பாண்ட்டன், வெறும் 16 பந்தில் அரைசதம் அடித்தார். 

பிக்பேஷ் லீக் வரலாற்றில் இதுதான் இரண்டாவது அதிவேக அரைசதம். கிறிஸ் கெய்ல் 12 பந்தில் அரைசதம் அடித்ததுதான் சாதனையாக இருக்கிறது. அதன்பின்னர் பிக்பேஷ் லீக்கில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் இதுதான். அதிரடியாக ஆடிய டாம் பாண்ட்டன், 19 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் தன் பங்கிற்கு 13 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார். டாம் பாண்ட்டன், கிறிஸ் லின்னின் அதிரடியால் 8 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி, 119 ரன்களை குவித்தது. 

8 ஓவரில் 120 ரன்கள் என்ற கடினமான இலக்கை சிட்னி தண்டர் அணிக்கு நிர்ணயித்துள்ளது. கேகேஆர் அணியால் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு எடுக்கப்பட்ட டாம் பாண்ட்டன், பிக்பேஷ் லீக்கில் எதிரணிகளை அச்சுறுத்தும் விதமாக ஆடிவருகிறார். பாண்ட்டனின் ஃபார்ம், கேகேஆர் அணிக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.