டி.என்.பி.எல் தொடரில் கோவை கிங்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதிய 8வது லீக் ஆட்டத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது. ஷாரூக் கான் அரைசதம் அடித்தும் கோவை அணி தோல்வியைத் தழுவியது.
ஒன்பதாவது டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
கோவை கிங்ஸ் பேட்டிங்: ஷாரூக் கானின் அரைசதம்
முதலில் பேட்டிங் செய்த கோவை அணியின் தொடக்க வீரர்களாக ஜிதேந்திர குமார் (17 ரன்கள்) மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் (20 ரன்கள்) களமிறங்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாரூக் கான் ஒருபுறம் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். மறுபுறம் சச்சின் (15 ரன்கள்), ஆண்ட்ரே சித்தார்த் (20 ரன்கள்), மாதவ பிரசாத் (4 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து, ஷாரூக் கான் உடன் பிரதீப் விஷால் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர். நிலைத்து நின்று ஆடிய ஷாரூக் கான் அரைசதம் (77 ரன்கள்) அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
மதுரை பாந்தர்ஸ் சேசிங்: ராம் அரவிந்த், சத்ருவேத் அதிரடி!
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் அபாரமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய பாலசந்தர் அனிருத் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ராம் அரவிந்துடன் சத்ருவேத் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் கோவை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய ராம் அரவிந்த் அரைசதம் அடித்து 48 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இறுதியில், மதுரை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. கடைசி வரை களத்தில் இருந்த சத்ருவேத், 23 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம், இந்தத் தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


