பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தலைமைத்துவ பண்புகளும் நிர்வாகத்திறமையும் வாய்ந்தவர். 

பிசிசிஐ-யின் தலைவராவதற்கு முழு தகுதியும் திறமையும் உள்ள நபர் கங்குலி. சூதாட்ட சர்ச்சையில் இந்திய கிரிக்கெட்டே சிதைந்து கிடந்த 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இளம் வீரர்களை கொண்டு வலுவான அணியாக உருவாக்கி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை தலைநிமிர வைத்து, இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் கங்குலி. சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான், முகமது கைஃப் போன்ற ஆல்டைம் சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தவர் கங்குலி. 

கங்குலியை கிரிக்கெட் ரசிகர்கள் தாதா என்றுதான் அழைப்பார்கள். கங்குலியும் அந்த பெயருக்கு தகுதியானவர். கங்குலியை ரசிகர்கள் காரணமில்லாமல் அப்படி அழைக்கவில்லை. கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் செம கெத்து காட்டி தான் ஒரு தாதா என்று நிரூபித்த சில சம்பவங்களை பார்ப்போம். 

1. கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸில் காட்டிய கெத்து:

2002ம் ஆண்டில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்த தொடர் 3-3 என சமநிலை அடைந்தது. முதல் 5 போட்டிகளில் இந்தியா மூன்றிலும் இங்கிலாந்து இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தன. கடைசி போட்டியில் இந்தியா வென்றால் ஒருநாள் தொடரை இந்திய அணி 4-2 என கைப்பற்றலாம். அதே இங்கிலாந்து வென்றால் 3-3 என தொடர் சமநிலை அடைந்தது.

இப்படியான சூழலில் கடைசி மற்றும் 6வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி நேரத்தில் பெற்ற திரில் வெற்றியை கொண்டாடும் விதமாக இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் டிஷர்ட்டை கழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்த தோல்வியால் அப்போதைய கேப்டன் கங்குலி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த சம்பவம் 2002 பிப்ரவரியில் நடந்தது. 

அதன்பிறகு ஜூன் மாதம் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடியது. இலங்கையும் கலந்துகொண்ட அந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 326 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி இந்திய அணி வெற்றி பெறும். இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்தியாவில் டிஷர்ட்டை கழற்றி சுற்றிய பிளிண்டாப்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்குலி டிஷர்ட்டை கழற்றி சுற்றி வெற்றியை கொண்டாடினார். இந்த சம்பவத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்க மாட்டார்கள்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட், கங்குலியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கும் கெத்தாக பதிலளித்தார் கங்குலி. அந்த உரையாடலை பாருங்கள்..

பாய்காட்: கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸில் நீங்கள் டீ ஷர்ட்டை கழற்றி சுற்றிய அனுபவம் குறித்து கண்டிப்பாக நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்.

கங்குலி: உங்க பசங்கள்ல ஒருத்தன் இதே மாதிரி மும்பையில் டி ஷர்ட்டை கழற்றி சுற்றினான். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் நான் இப்படி செய்தேன். ]

பாய்காட்: ஆனால், லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா அல்லவா? இங்கு இப்படி செய்யலாமா?

கங்குலி: உங்களுக்கு லார்ட்ஸ் “மெக்கா”னா எங்களுக்கு மும்பை வான்கடே தான் கிரிக்கெட்டின் மெக்கா என்று கெத்தாக பதிலளித்தார் கங்குலி.

2. ஸ்டீவ் வாக்கை கதறவிட்ட சம்பவம்:

எதிரணி வீரர்களை வம்பு இழுப்பதற்கு பெயர்போன அணி ஆஸ்திரேலியா. அப்பேர்ப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக்கையே கதறவிட்டவர் நம்ம தாதா. சூதாட்ட புகாரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இந்திய அணி கோமாளியாக பார்க்கப்பட்டது. மற்ற அணிகளே அப்படி பார்த்தார்கள் என்றால், ஆஸ்திரேலிய அணி சொல்லவே தேவையில்லை. 

அப்படியான சூழலில் இந்திய அணியை கெத்தான அணியாக சர்வதேச அரங்கில் காட்டியவர் கங்குலி. எல்லா காலக்கட்டத்திலும் திமிருடன் வலம்வருவது ஆஸ்திரேலிய அணிதான். பொதுவாக அந்த அணியினர் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பதிலும் சீண்டுவதிலும் வல்லவர்கள். வம்புக்கு இழுப்பதில் மட்டுமல்லாது ஸ்டீவ் வாக் தலைமையிலான அணி, பாண்டிங் தலைமையிலான அணி என அந்த அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய காலம் அது. 

இப்படி எதிரணி வீரர்களை வம்புக்கு இழுத்தே பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை, அதன் கேப்டனை பாடாய் படுத்தி கெத்து காட்டியவர் கங்குலி. 2001ம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் போது, டாஸ் போடுவதற்கு ஒவ்வொரு முறையும் தாமதமாகவே வந்து, ஸ்டீவ் வாக்கை காக்க வைத்தார் கங்குலி. அதனால் ஸ்டீவ் வாக் கடும் எரிச்சலடைந்தார். கங்குலி படுத்திய இந்த கொடுமையை அவரே வாய்விட்டு வெளிப்படையாக சொல்லியும் உள்ளார். 

3. முகமது யூசுஃபை தெறிக்கவிட்ட சம்பவம்:

2005ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த யூசுப் திடீரென காயம் ஏற்பட்டதாகக் கூறி தரையில் அமர்ந்துகொண்டார். அவரை மருத்துவ நிபுணர்கள் சோதித்து கொண்டிருந்தனர். இதனால் நேர விரயம் ஆனது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை விரைவாகவும் செய்யப்படவில்லை. 

யூசுஃப் இதை வேண்டுமென்றே செய்தாரா அல்லது உண்மையாகவே காயமா என்பது ஒருபுறமிருக்க, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் இந்திய அணியின் கேப்டனான கங்குலிக்குத்தான் அபராதம் விதிக்கப்படும். அதனால் சுதாரித்துக்கொண்ட கங்குலி, யூசுஃபின் காதில் விழும்படி, அம்பயரிடம் சென்று, யூசுஃப் விரயமாக்கும் நேரத்தை குறித்துக்கொள்ளுங்கள் என்றார். 

இதைக்கேட்ட யூசுஃப், உடனடியாக, நான் என்ன வேண்டுமென்றா செய்கிறேன்? என கங்குலியை நோக்கி கேள்வியெழுப்பினார். அப்போது, தோனியின் தோள் மீது கை போட்டுக்கொண்டு கெத்தாக நின்ற கங்குலி, நீங்க வேணும்னே செய்றீங்கனு நான் சொல்லல.. எங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன செய்வது? அதற்காகத்தான் முன்கூட்டியே நான் அம்பயரிடம் சொன்னேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த செயல்களின் போது கங்குலியின் உடல்மொழியே செம கெத்தா இருக்கும். 

4. ஒட்டுமொத்த ஈடன் கார்டனே தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவளித்த அரிய சம்பவம்:

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் சச்சின், கங்குலி, தோனி, கோலி என அந்தந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த வீரர்களாக இருந்தவர்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கின்றனர். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் அவர்கள் ஆடும் காலம் வரையில்தான் அவர்களது தீவிர ரசிகர்களாக ரசிகர்கள் இருப்பர். 

சச்சினின் ரசிகர்களுக்கு சச்சினுக்கு அடுத்து கோலியையோ அல்லது மற்ற சில வீரர்களையோ பிடிக்கலாம். ஏனென்றால், அந்தந்த காலத்தில் சிறந்து விளங்கும் வீரர்களின் ரசிகர்களாக ரசிகர்கள் அப்டேட் ஆகிவிடுவர். ஆனால் கங்குலியின் ரசிகர்கள் அவர் ஆடும்போதும் சரி, ஓய்வுபெற்ற பிறகும் சரி, எப்போதுமே கங்குலியின் ரசிகர்கள் தான். அதுதான் கங்குலி. கொல்கத்தாவே கங்குலியின் கோட்டை தான்.

அந்தளவிற்கு கொல்கத்தாவில் வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் கங்குலி. அது எந்தளவிற்கு தீவிரம் என்றால், கங்குலி இந்திய அணியில் ஆடவில்லை என்றால், எதிரணிக்கு ஆதரவளித்து அந்த அணியை வெற்றி பெறச்செய்யும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்களை பெற்றவர் கங்குலி. அப்படியொரு சம்பவம் 2005ம் ஆண்டு நடந்தது.

2005ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இந்த தொடரிலிருந்து கங்குலி ஓரங்கட்டப்பட்டார். இந்த தொடரின் 4வது ஒருநாள் கங்குலியின் கோட்டையான கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. அந்த தொடருக்கு டிராவிட் கேப்டனாக செயல்பட்டார். தங்களது ஆஸ்தான நாயகனான கங்குலி இல்லாத இந்திய அணியை கண்டு உச்சகட்ட கோபமடைந்த கொல்கத்தா ரசிகர்கள், இந்திய அணிக்கு பாடம் புகட்ட நினைத்தனர்.

அதன் விளைவாக ஒட்டுமொத்த ஈடன் கார்டன் மைதானமும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆதரவளித்தது. டிராவிட்டை ஏசினர், கிண்டல் செய்தனர். “நோ சவுரவ் நோ கிரிக்கெட்” என முழங்கினர். தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரவாரமாக ஆதரவளித்தனர். சொந்த நாட்டில் இப்படியொரு எதிர்ப்பை கண்டு துவண்டுபோன வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதன் விளைவாக 188 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இந்த இலக்கை எளிமையாக எட்டிய தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வு. இதற்கு முன்னும் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை. இனிமேலும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. 

5. ரவி சாஸ்திரியின் மூக்கை உடைத்த சம்பவம்:

நமது மூக்கு உடைபடப்போகிறது என்பதையும் தவறான நபரிடம் வாயை கொடுக்கிறோம் என்பதையும் அறியாமல் கங்குலியிடம் ஒரு கேள்வியை கேட்டார் ரவி சாஸ்திரி. அந்த கேள்விக்கு சாஸ்திரியின் மூக்கை உடைக்கும்படி நறுக்குனு பதிலளித்தார் கங்குலி. 

ஈடன் கார்டர்னில் உங்கள் பெயரில் ஸ்டாண்ட் இல்லையே என்று ரவி சாஸ்திரி கேட்க, ஒட்டுமொத்த ஈடன் கார்டர்ன் ஸ்டேடியமே என்னுடையதுதான் என்று செம கெத்தா பதிலளித்தார் கங்குலி. இந்த டைமிங் பன்ச்சோ கெத்தோ கங்குலியை தவிர வேறு யாருக்கும் வராது. அதனால்தான் கங்குலி தாதா....