சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பல பேட்டிங் சாதனைகளை முறியடித்து, புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார்.

விராட் கோலி இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார். இன்னும் 2 சதங்கள் அடித்தால் பாண்டிங்கின் சத சாதனையை முறியடித்துவிடுவார். அவரது கெரியர் முடிவதற்குள், சச்சின் வசம் இருக்கும், அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி வலம்வரும் நிலையில், அவரது விக்கெட்டை வீழ்த்துவதே பல பவுலர்களின் கனவாக உள்ளது. அப்படியிருக்கையில், விராட் கோலியை திணறடித்த ஒரு பந்து உள்ளது. அந்த பந்தை எதிர்கொண்டபோதே, அவர் தனது ரியாக்‌ஷனின் வாயிலாக உணர்த்தினார். 

2018ல் இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடந்த மூன்றாம் ஒருநாள் போட்டியில் விராட் கோலியை, இங்கிலாந்தின் ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத், தனது அபாரமான சுழலில் கோலியை கிளீன் போல்டாக்கினார். அந்த பந்தில் விராட் கோலி அவுட்டானதும், ரஷீத் கானின் மாயாஜால சுழலை கண்டு வியந்தார். அந்த புகைப்படம் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்து, இதுதான் நீங்கள் எதிர்கொண்ட சிறந்த பந்தா விராட் கோலி? என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேள்வியெழுப்பியுள்ளது.

கண்டிப்பாக, விராட் கோலி அவரது கெரியரில் எதிர்கொண்ட சிறந்த பந்துகளில் இதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. அந்த பந்தை வீசிய அடில் ரஷீத்தும், நான் செய்ததிலேயே மிகவும் திருப்தியளிக்கக்கூடியது இது என்று அடில் ரஷீத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.