தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். ரிஷப் பண்ட் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

ஆனால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளாமல் ரிஷப் பண்ட் சொதப்பிவருகிறார். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே படுமோசமாக செயல்பட்டுவருகிறார். ஆட்டத்துக்கு ஆட்டம் அனுபவத்தை பெற்று மேம்பட வேண்டிய ரிஷப் பண்ட், அதற்கு நேர்மாறாக நாளுக்கு நாள் மழுங்கிவருகிறார். 

வழக்கம்போலவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலுமே சொதப்பினார். பேட்டிங்கில் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாமல் திணறிய ரிஷப் பண்ட், தட்டுத்தடுமாறி 33 ரன்கள் அடித்தார். விக்கெட் கீப்பிங்கில் எளிய கேட்ச்சை தவறவிட்டார். விக்கெட் கீப்பிங்கின் அடிப்படையே பந்துகளை பிடிப்பதுதான். ஆனால் அவரோ, பந்துகளை கையில் பிடிப்பதேயில்லை. பந்தை தடுத்துவிட்டால் போதும் என்கிற மனநிலையுடன் விக்கெட் கீப்பிங் செய்கிறார். 

அதே பழக்கம் கேட்ச் பிடிக்கும்போதும் தொடர்வதால் கேட்ச்களை தவறவிடுகிறார். பேட்டிங்கில் சரியாக ஆடவில்லையென்றாலும் கூட, திரும்ப ஃபார்முக்கு வந்துவிடலாம். ஆனால் விக்கெட் கீப்பிங்கில் மோசம் என்றால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் விக்கெட் கீப்பர் சொதப்பினால், அது அணிக்கு பாதகமாக முடிந்துவிடும். முக்கியமான நேரத்தில் கேட்ச்சை விட்டால், மொத்தமும் சொதப்பலாக அமைந்துவிடும். 

ஐபிஎல்லில் அதிரடியாக ஆடினார் என்பதற்காக, தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்று உறுதி செய்துவிட்டு அவரை அணியில் எடுத்து ஆடவைத்து வருகின்றனர். ஐபிஎல்லின் அடிப்படையில் நேரடியாக வீரரை இந்திய அணிக்கு தேர்வு செய்தால், விஜய் ஹசாரே, தியோதர் டிராபி, ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி ஆகிய உள்நாட்டு தொடர்கள் எதற்கு? என்ற கேள்வி இயல்பாக எழுவதில் வியப்பு ஏதுமில்லை. 

இதை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி கூட சுட்டிக்காட்டியிருந்தார். நேரடியாக இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து கலக்குவதற்கு அனைவரும் சச்சின் கிடையாது. திறமையான இளம் வீரர்களை உள்நாட்டு போட்டிகளில் போதுமான அளவு ஆடவைத்து அவரது திறமையையும் அனுபவத்தையும் அதிகரித்து சிறந்த வீரராக இந்திய அணியில் எடுக்க வேண்டும். இல்லையென்றால், இளம் வயதிலேயே நேரடியாக இந்திய அணியில் எடுக்கப்பட்ட பார்த்திவ் படேலின் நிலைமைதான் என்று தடாலடியாக தெரிவித்திருந்தார். 

விக்கெட் கீப்பிங்கின் அடிப்படையே பந்துகளை பிடிப்பதுதான். ஆனால் அதையே திறம்பட செய்யமுடியாமல், பந்தை தடுத்து மட்டுமே வருகிறார் ரிஷப் பண்ட். அதே பழக்கத்தால்தான் கேட்ச்சையும் பிடித்து பிடித்து, விட்டுவிடுகிறார் போல என்ற எண்ணத்தை கொடுக்கிறது. 

ரிஷப் பண்ட் படுமோசமாக சொதப்பிவரும் நிலையிலும், சஞ்சு சாம்சனை முயற்சி செய்து பார்க்காமல், ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பது, ரிஷப் பண்ட்டை அணி நிர்வாகம் தேர்வு செய்தது சரிதான் என்று நியாயப்படுத்த முயற்சி செய்வதாகவே தெரிகிறது. தோனியின் கெரியர் முடிந்தால், அடுத்ததாக அந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்து அவர்களில் சிறந்த மற்றும் அதேநேரத்தில் உள்நாட்டு போட்டிகளிலும் போதியளவில் ஆடி நல்ல அனுபவத்தை கொண்ட வீரரை தேர்வு செய்வதுதான் சரியான பிராசஸ். அதைவிடுத்து ஏற்கனவே ஒரு வீரரை உறுதி செய்துவிட்டு, அவரையே அணியிலும் எடுத்துவைத்து, அவர் என்ன சொதப்பு சொதப்பினாலும், தகுதியுள்ள வேற வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல், அவருக்கே(ரிஷப்) தொடர்ந்து வாய்ப்புகள் வழங்குவது சரியான நடவடிக்கையாக இருக்கமுடியாது. 

ஏற்கனவே ரிஷப் பண்ட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அவற்றை அவர் பயன்படுத்தி கொள்ளாததால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி தனது உண்மையான திறமையை நிரூபிக்கவில்லையென்றால், வாய்ப்பு பறிபோகும். ஏனெனில் வாய்ப்புக்காக காத்திருக்கும் தகுதியான அடுத்த வீரரை நீண்ட காலத்திற்கு உட்கார வைத்திருக்க முடியாது.