இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்குகிறது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்வது மட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளி கணக்கை தொடங்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. 

இந்நிலையில், இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள உத்தேச இந்திய அணியை பார்ப்போம். கடந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரின் புறக்கணிப்பும் விவாதத்தையும் சர்ச்சையையும் எழுப்பியது. ஆனால் இந்திய அணி இவர்கள் இருவரும் இல்லாமலேயே 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

ஹனுமா விஹாரியும் ஜடேஜாவும் சிறப்பாக செயல்பட்டனர். ஹனுமா விஹாரி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 93 ரன்களை குவித்தார். அது மிக முக்கியமான இன்னிங்ஸ். அதேபோல ஜடேஜாவும் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஜடேஜா, விக்கெட்டும் வீழ்த்தினார். அணியில் மாற்றம் செய்தால் இவர்களது இரண்டு இடங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவர்கள் இருவருமே நீக்கப்பட வாய்ப்பில்லை. ஹனுமா விஹாரியும் ஜடேஜாவும் சிறப்பாக ஆடியிருப்பதால், இரண்டாவது போட்டியிலும் அவர்கள் ஆடுவார்கள். 

அதனால் இரண்டாவது போட்டியிலும், முதல் போட்டியில் ஆடிய அதே அணி தான் களமிறங்கும். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா.