கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்வதோடு கூடுதலாக 40 புள்ளிகளை பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் கடைசி போட்டியில் வென்று ஒயிட்வாஷ் ஆவதை தவிர்த்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தங்களது கணக்கை தொடங்கும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் உள்ளது. 

நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் ஆடும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். கடைசி போட்டியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இரண்டாவது போட்டி நடந்த புனே ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமானது என்பதால், ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 

ஆனால் ராஞ்சி ஆடுகளம் பெரியளவில் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்காது என்பதால், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

கடைசி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி.