உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

தென்னாப்பிரிக்க அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று படுமோசமாக உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியை வீழ்த்துவது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வலுவிழந்துள்ளது. காயம் காரணமாக அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பவுலிங் தான் தென்னாப்பிரிக்க அணியின் பெரிய பலமாக இருந்த நிலையில், ஸ்டெய்னும் இங்கிடியும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. 

முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணியும் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

பெரும் விவாதத்துக்குள்ளான நான்காம் வரிசையில் இன்றைய போட்டியில் ராகுல் இறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து நல்ல ஃபார்மில் உள்ளார் ராகுல். எனவே அவர் இறக்கப்படுவார். கேதர் ஜாதவ் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதால், ஆடும் லெவனில் அவரே இறக்கப்படுவார். ஜடேஜா இறக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. ஒரு பேட்ஸ்மேன் கூடுதலாக தேவை என்பதால், ஜடேஜாவை விட கேதர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்ற வகையில் கேதர் இறக்கப்படுவார். 

மற்ற வீரர்கள் தெரிந்ததுதான். இரண்டு ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவும் ஷமியும் இருப்பர். புவனேஷ்வர் குமார் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லை. அவரது பந்தில் வேகமும் இல்லை. எனவே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பிருக்காது. ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப்-சாஹல் ஜோடி கண்டிப்பாக ஆடும். 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, பும்ரா.