தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணியின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி சற்று குறைந்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேனில் அந்த அணியையும், இங்கிலாந்தின் கோட்டைகளான லண்டன் லார்ட்ஸ் மற்றும் ஓவல் ஆகிய மைதானங்களில் அந்த அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, இப்போது தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையான செஞ்சூரியனில் கொடிநாட்டியுள்ளது இந்திய அணி.
இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. அதனால் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம். வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் தான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன. ஆஸ்திரேலிய அணி 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணி 63.28 வெற்றி சதவிகிதத்துடன் வெற்றி புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் இருந்தது. இப்போதும் 4ம் இடத்தில் தான் இந்திய அணி உள்ளது. ஆனால் இந்திய அணியின் புள்ளி குறைந்துள்ளது. அதற்கு காரணம், பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதுதான்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் புள்ளி குறைக்கப்பட்டு, 63.28லிருந்து இப்போது 63.09ஆக குறைந்துள்ளது.
