உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. 

மான்செஸ்டரில் நடந்துவரும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. ரிஷப்பும் பாண்டியாவும் ஓரளவுக்கு நம்பிக்கையளித்து வருகின்றனர். முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 239 ரன்கள் அடித்தது. 

240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித்தும் கோலியும் தலா ஒரு ரன்னில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். கோலி அவுட்டான அடுத்த ஓவரிலேயே ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப்பும் பாண்டியாவும் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ஆனால் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடிவந்த ரிஷப் பண்ட், அவசரப்பட்டு பெரிய ஷாட் ஆடி 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பண்ட் விக்கெட்டுக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவும் அவசரப்பட்டு தூக்கியடித்து 32 ரன்களில் வெளியேறினார். ஸ்பின் பவுலிங்கை பார்த்தால் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற தனது ஆர்வத்தை அடக்கமுடியாத ஹர்திக் பாண்டியா, சாண்ட்னெரின் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று ஷாட் சரியாக கனெக்ட் ஆகாததால் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இவர்களில் ஒருவர் அவுட்டாகிவிட்டாலும் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும். இந்திய அணியின் கடைசி நம்பிக்கை இந்த ஜோடி தான். 33 ஓவருக்கு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே தேவைப்படும் ரன்ரேட் எகிறி கொண்டிருப்பதால் இந்திய அணியின் நிலை ரொம்பவே மோசமாக உள்ளது. இந்த ஜோடி பிரிந்தால் போட்டி முடிந்தது. 

தல தோனி மற்றும் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இருந்து அவரது தளபதியாக இருந்துவரும் ஜடேஜா ஆகிய இருவரின் கையில் தான் உள்ளது.