இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. 

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. இதையடுத்து ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகின. 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் ராபின் சிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, ஆகஸ்ட் மாத மத்தியில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தவுள்ளது. மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் உள்ளது. 

ஆனால் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களை மாற்றுவது உறுதி. உலக கோப்பை அரையிறுதியில், இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் ஏழாம் வரிசையில் இறக்கியது பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தான் என்ற தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அவர் பேட்டிங் பயிற்சியாளராக பெரிதாக எதையும் செய்தது போல் தெரியவில்லை. அதனால் அவர் கண்டிப்பாக மாற்றப்படுவார். 

அதேநேரத்தில் பவுலிங் பயிற்சியாளர் பதவியில் தற்போது இருக்கும் பரத் அருணே, தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பவுலிங் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது. தற்போதைய சூழலில் இந்திய அணியின் பெரிய பலமாக இருப்பதே பவுலிங் தான். அந்தளவிற்கு திறமையான பவுலர்கள் தற்போதைய அணியில் இருப்பதுதான் காரணம் என்றாலும் பவுலிங் பயிற்சியாளரின் பங்களிப்பும் அதில் இருக்கிறது. எனவே பவுலிங் யூனிட் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால் பவுலிங் பயிற்சியாளர் மாற்றப்படமாட்டார் என தெரிகிறது.