இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்ப்பெல் மற்றும் லெவிஸ் ஆகிய இருவருமே டக் அவுட்டாகினர். காம்ப்பெல்லை வாஷிங்டன் சுந்தரும் லெவிஸை புவனேஷ்வர் குமாரும் வீழ்த்தினர். 

அதன்பின்னர் ஒருமுனையில் பொல்லார்டு மட்டும் நிலைத்து நிற்க, பூரான், ஹெட்மயர், பவல், பிராத்வெயிட், சுனில் நரைன் என மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. பொல்லார்டு மட்டுமே நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி 49 ரன்கள் அடித்தார். ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு சைனியின் பந்தில் ஆட்டமிழந்தார். பொல்லார்டின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 95 ரன்கள் அடித்தது. அவரும் சொதப்பியிருந்தால் வெஸ்ட் இண்டீஸின் நிலை மிகவும் பரிதாபமாகியிருக்கும். 

96 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், வெறும் ஒரு ரன்னில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் அடித்து ரோஹித் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ரன்னே எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கோலியும் மனீஷ் பாண்டேவும் தலா 19 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, க்ருணல் பாண்டியா தன் பங்கிற்கு 12 ரன்கள் அடித்தார். பின்னர் ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் இணைந்து இலக்கை 18வது ஓவரில் எட்டினர். 

வெறும் 96 ரன்கள் என்ற இலக்கை அடிப்பதற்கே இந்திய அணி கடுமையாக போராடியது. அவ்வளவு எளிதாக அடித்து விட முடியவில்லை. 18வது ஓவரில் 96 என்ற இலக்கை எட்ட முடிந்தது. மிடில் ஆர்டர் சிக்கல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் மிடில் ஆர்டர் வலுவடைய வேண்டும். அப்படியொன்றும் மிரட்டலான பவுலிங்கை கொண்டிராத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே படுமோசமாக சொதப்பியது இந்திய பேட்டிங் ஆர்டர். ஒருவேளை இன்னும் 20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடியளித்திருக்கும்.