இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில்ம் 244 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியை 191 ரன்களுக்கு சுருட்டி, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையில், 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒரு வீரர் இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை.

புஜாரா, ரஹானே, அஷ்வின் ஆகிய மூவரும் டக் அவுட்டானார்கள். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதால், 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி நிர்ணயித்த 90 ரன்கள் என்ற இலக்கை ஆஸி., அணி எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி அடித்த இந்த 36 ரன்கள் தான், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி அடித்த மிகக்குறைவான ஸ்கோர் ஆகும். இதற்கு முன், 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடித்த 42 ரன்கள் தான், ஒரு இன்னிங்ஸில் அடித்த குறைவான ஸ்கோராக இருந்தது.