இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி சதம், கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றின் விளைவாக இந்திய அணி 347 ரன்களை குவித்தது. 

348 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லர் அதிரடியாக ஆடி சதமடித்தார். டி20 போட்டிகளில் அவுட்டானதை போல, ஒருநாள் போட்டியில் பாதியில் அவுட்டாகிவிடாமல், கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். 

348 ரன்கள் என்ற இலக்கை 49வது ஓவரிலேயே எட்டி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங்கில் நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வெற்றி. நியூசிலாந்து அணியின் இந்த சாதனை வெற்றிக்கு இந்திய அணியின் மோசமான பவுலிங் தான் காரணம். 

பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் தாங்கள் வீசிய ஓவர்களில் பந்துக்கு நிகரான ரன்களை மட்டுமே வழங்கினர். ஆனால் ஷர்துல் தாகூரும் குல்தீப் யாதவும் வாரி வழங்கிவிட்டனர். ஷர்துல் தாகூர் 9 ஓவர்களை வீசி 80 ரன்களையும் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 84 ரன்களையும் வழங்கினர். இவர்கள் இருவரது பவுலிங்கை டார்கெட் செய்து அடித்து வெற்றி பெற்றுவிட்டது நியூசிலாந்து அணி. இவர்களின் மோசமான பவுலிங் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

எனவே இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் இவர்களும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடுகிறது இந்திய அணி. இந்த போட்டி நடக்கும் ஆக்லாந்து மைதானம் சிறியது. எனவே பவுலர்கள் திறம்பட வீசியாக வேண்டும். எனவே முதல் போட்டியில் பவுலிங்கில் சொதப்பிய இருவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. 

குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே, சாஹல் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் மனீஷ் பாண்டேவை சேர்க்காமல் கேதர் ஜாதவை சேர்த்தது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் அதற்காக அடுத்த போட்டியில் மனீஷ் பாண்டே சேர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த போட்டியில் கேதர் ஜாதவ் நன்றாகவே பேட்டிங் ஆடினார். 

உத்தேச இந்திய அணி:

பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா.