Asianet News TamilAsianet News Tamil

மயன்க் இரட்டை சதம்.. ரஹானே, ஜடேஜா அரைசதம்.. மறுபடியும் சிக்ஸர் மழை பொழிந்த உமேஷ் யாதவ்.. இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களை குவித்துள்ளது. 
 

team india mega score in first innings of indore test against bangladesh
Author
Indore, First Published Nov 15, 2019, 5:26 PM IST

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் அக்டோபர் 14ம் தேதி(நேற்று) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த புஜாரா, வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக ஆடி பவுண்டரிகளாக விளாசி 72 பந்துகளில் 54 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வந்த கேப்டன் கோலி, இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய மயன்க் அகர்வாலுடன் ரஹானே ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசன் முழுவதும் விக்கெட்டை இழக்காமல் ஆடினர்.

சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் சதமடித்தார். அவரை தொடர்ந்து ரஹானே அரைசதம் அடித்தார். டீ பிரேக்கின்போது மயன்க் அகர்வால் 150 ரன்களை கடந்தும் ரஹானே 80 ரன்களை கடந்தும் களத்தில் இருந்தனர். டீ பிரேக் முடிந்து வந்ததும் ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலும் ரஹானேவும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 190 ரன்களை குவித்தனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்.

team india mega score in first innings of indore test against bangladesh

இரட்டை சதமடித்த பிறகு அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்த மயன்க், 243 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரிதிமான் சஹா வெறும் 12 ரன்னில் நடையை கட்டினார். அதன்பிறகு அஷ்வினை இறக்காமல், இந்திய அணி உமேஷ் யாதவை இறக்கிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்த உமேஷ் யாதவ், அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்துவார் என்ற நம்பிக்கையில் களமிறக்கிவிடப்பட்டார். 

அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை வீணடிக்காத உமேஷ், 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார். எபடாட் ஹுசைன் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். பொறுப்புடனும் அதேநேரத்தில் சீராக ரன்னையும் சேர்த்த ஜடேஜா, அரைசதம் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களை குவித்துள்ளது. 

வங்கதேசத்தை விட 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. எனவே இதுவே போதும் என்பதால், இந்திய அணி இத்துடன் டிக்ளேர் செய்துவிடும். மூன்றாம் நாளான நாளைய ஆட்டத்தில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios