அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஒருநாள் உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக படு தீவிரமாக பல பரிசோதனை முயற்சிகளை செய்துவருகிறது. 

இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் சிறப்பாகவுள்ளது. ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி என டாப் ஆர்டர் மிக வலுவாகவுள்ளது. மிடில் ஆர்டரில் இருந்த சிக்கலுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் இன்னும் பெரியளவில் சோபிக்க தொடங்காத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் வலு சேர்க்கிறார். ஃபினிஷிங் வேலையை செய்ய ஹர்திக் பாண்டியா இருக்கிறார். 

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவும் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரையும் ஆடவைப்பார்கள் என்பதால் அவரும் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பார். ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் என நல்ல அனுபவமான தரமான பவுலிங் யூனிட் உள்ளது. 

ஆனால் ஸ்பின் பவுலிங் யூனிட்டில் தான் பெரிய ஓட்டை உள்ளது. பேட்டிங் டெப்த் தேவை என்பதால் பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் ஜடேஜா, க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்புதான் அணியில் பிரகாசமாக உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் அணியில் எடுக்கப்படுகிறார். ஆனால் அவரது ரிஸ்ட் ஸ்பின் பார்ட்னர் குல்தீப் யாதவ் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருவரும் இணைந்து ஆடுவது சந்தேகமே என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் குல்தீப் யாதவின் பவுலிங்கும் முன்பைப்போல இப்போது பெரியளவில் எடுபடுவதில்லை. ஆனால் இருக்கும் ஸ்பின்னர்கள் சோபிக்க தவறுகின்றனர். வாஷிங்டன் சுந்தர், பவர்ப்ளேயில் நன்றாக வீசுவதால் பவர்ப்ளேயில் பயன்படுத்தப்படுகிறார். அவர் பவர்ப்ளேயில் நல்ல எகானமி ரேட் வைத்துள்ளார். 

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், முதல் டி20 போட்டியில் சுந்தரின் பவுலிங்கை வெளுத்துவிட்டனர். அதிலும் தொடக்க வீரர் எவின் லூயிஸ், முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி மிரட்டினார். சுந்தரின் பந்திலேயே அவுட்டும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிடில் ஓவரில் தற்போதைய ஸ்பின் காம்பினேஷன் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 2019ல் இதுவரை டி20 போட்டிகளில் 30 ஓவர்களை வீசியுள்ள சுந்தர், வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒரு ஆண்டில் இந்திய பவுலரின் மோசமான பவுலிங் பெர்ஃபார்மன்ஸில் இந்த ஆண்டில் சுந்தரின் பவுலிங் தான் முதலிடத்தில் உள்ளது. 

அதேபோல சாஹல் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தாலும், அவரது பவுலிங்கை போட்டு பொளந்து கட்டிவிடுகின்றனர் எதிரணி பேட்ஸ்மேன்கள். அதிலும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற நல்ல வலுவான பேட்ஸ்மேன்களை கொண்ட அணி என்றால், சாஹலின் கதி அதோகதிதான். அதுமட்டுமல்லாமல் சாஹலுக்கு பேட்டிங்கும் ஆட தெரியாது. எனவே பேட்டிங் ஆட தெரிந்த அனுபவ ஸ்பின்னருக்கான தேவை இருக்கிறது. 

மீண்டும் டி20 அணியில் இடம்பிடிப்பேன் என்றும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் மிக உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் அஷ்வினை அழைக்கும் நேரம் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் அவரது மந்தமான ஃபீல்டிங்தான் ஒரே குறை. இந்நிலையில், அணி நிர்வாகம் என்ன முடிவெடுக்கிறது என்று பார்ப்போம்.