இந்தூரில் கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இரண்டு முக்கிய வீரர்களும் ஏமாற்றமளித்தனர். 

ஆனால் மயன்க் அகர்வால் மிகச்சிறப்பாக ஆடி இரட்டை சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய புஜாரா, ரஹானே ஆகியோர் அரைசதம் அடித்தனர். புஜாரா அதிரடியாக ஆடி 72 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். அஷ்வினுக்கு முன்பாகவே இறக்கிவிடப்பட்ட உமேஷ் யாதவ், வெறும் 10 பந்தில் 3 சிக்ஸர்கள் உட்பட 25 ரன்களை விளாசினார். இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

அத்துடன் முதல் இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்ததை அடுத்து, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 343 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது வங்கதேசம். முதல் இன்னிங்ஸில் தலா 6 ரன்களில் வெளியேறிய வங்கதேச தொடக்க வீரர்கள், இந்த இன்னிங்ஸிலும் சொல்லி வைத்தாற்போல தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இம்ருல் கைஸை உமேஷ் யாதவ் கிளீன் போல்டாக்க, ஷத்மான் இஸ்லாமை இஷாந்த் சர்மா போல்டாக்கி அனுப்பினார். அதற்கடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரையும் முகமது ஷமி வீழ்த்தினார். முஷ்ஃபிகுர் ரஹீமும் மஹ்மதுல்லாவும் ஆடிவருகின்றனர். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை வங்கதேச அணி, 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 60 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. இந்திய அணியை விட இன்னும் 283 ரன்கள் பின் தங்கியிருப்பதால், இந்திய அணிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.