இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் தொடர்ந்து சிதைத்து கொண்டிருக்கிறார். இந்திய அணியில் 15 ஆண்டுகளாக கோலோச்சிய ஜாம்பவான் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ரிஷப் பண்ட். 

ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்காலம் என இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நெருக்கடி கொடுக்காமல் இருந்தாலும், ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. இந்திய ஒருநாள் அணியின் சிக்கலாக இருக்கும் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டும் கூட, நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் இறக்கப்பட்டார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்காவது வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட், இரண்டிலுமே சொதப்பினார். ஒரு போட்டியில் 20 ரன்கள் அடித்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். அதேபோல் டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் 24 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்களும் மட்டுமே அடித்தார். ரிஷப் பண்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவருக்கான இடத்தை உறுதிசெய்ய முடியும்.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் என விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டி நிற்பதால், ரிஷப் பண்ட் அவருக்கான இடத்தை உறுதிசெய்ய நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். ரிஷப் பண்ட் தான் எதிர்காலத்தின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பது உறுதிப்படுத்து தெரிவிக்கப்பட்டதால், அவர் நன்றாக ஆடாவிட்டாலும் அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஆனால் இந்த வாய்ப்புகளை நல்ல வகையில் பயன்படுத்தி கொள்ளாமல் தொடர்ச்சியாக இப்படியே சொதப்புவாரானால், அவருக்கு ஆப்புதான் மிஞ்சும். இந்நிலையில், ரிஷப் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடலாம். ஆனால் அதேநேரத்தில் ட்ரினிடாட்டில் நடந்த போட்டியில் முதல் பந்திலேயே அவர் அடித்த மோசமான ஷாட்டை போல் மீண்டும் அடித்தால் முட்டிக்கு முட்டி தட்டப்படுவார். 

நீங்கள் சரியாக ஆடாதது உங்களுக்கு மட்டும் பாதிப்பல்ல. அது அணிக்கும் பாதிப்பாக அமைந்துவிடும் என்பதை உணரவேண்டும். இலக்கை விரட்டும்போது மறுமுனையில் கேப்டன் ஆடிக்கொண்டிருக்கிறார் என்றால், அந்த நேரத்தில் பொறுப்புடன் சூழலுக்கு ஏற்ப ஆட வேண்டும். ரிஷப் பண்ட்டின் பேட்டிங் ஸ்டைலையும் அணுகுமுறையையும் மாற்ற வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் கோலி சொல்வதுபோல, சூழலை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப தெளிவாக ஷாட்டுகளை தேர்வு செய்து ஆடுவது மிக முக்கியம். ரிஷப் பண்ட் இதை மட்டும் கருத்தில்கொண்டு ஆடினால் சிறந்த வீரராக உருவெடுத்துவிடுவார். அவர் அதிகமான ஐபிஎல் போட்டிகள் ஆடுவதால் விரைவில் கற்றுக்கொள்வார் என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.