உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவருகிறது.

டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி, தமிழ்நாட்டை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து தமிழ்நாடு அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஜெகதீசன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு 72 ரன்களை சேர்த்தனர்.

அதன்பின்னர் விஜய் சங்கர் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து 4ம் வரிசையில் களத்திற்கு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், ஐபிஎல்லில் கொல்கத்தா ஈடன் கார்டனில் அதிகமாக ஆடியிருப்பதால், அந்த அனுபவத்தை பயன்படுத்தி, ஜார்க்கண்டின் பவுலிங்கை பொளந்துகட்டி சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 17 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்தார் தினேஷ் கார்த்திக்.

ஷாருக்கான் 4 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் அடித்து கேமியோ ரோல் செய்தார். ஒருமுனையில் ஜெகதீசன், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஷாருக்கான் என விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து, கடைசிவரை இழுத்துச்சென்ற தொடக்க வீரர் ஹரி நிஷாந்த், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். ஆனால் அவரால் சதமடிக்க முடியவில்லை.

ஹரி நிஷாந்த், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி. 192 ரன்கள் என்ற கடின இலக்கை ஜார்க்கண்ட் அணி விரட்டிவருகிறது.