ரஞ்சி தொடரில் தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்ஸில் 424 ரன்களை குவித்தது.

தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் அபினவ் முகுந்த், ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடி ஸ்கோர் செய்ய, மறுமுனையில் சூர்யபிரகாஷ், கௌஷிக் காந்தி, கங்கா ஸ்ரீதர் ராஜு ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அபினவ் முகுந்த், சதத்தை தவறவிட்டு 86 ரன்களில் அவுட்டானார். 

அதன்பின்னர் தமிழ்நாட்டு அணியின் விக்கெட் கீப்பர் ஜெகதீசன், களத்தில் நங்கூரமிட்டு ஆடினார். அவர் மிகவும் மந்தமாக ஆடாமல் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினார். அபாரமாக ஆடி சதமடித்த ஜெகதீசன், சதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடினார். ஜகநாத் ஸ்ரீனிவாசன் ஒரு ரன்னிலும் சாய் கிஷோர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பின்னர் களத்திற்கு வந்த எம் முகமது, ஜெகதீசனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். 

Also Read - அந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

ஜெகதீசனும் முகமதுவும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்தனர். முகமது 42 ரன்களில் ஆட்டமிழக்க, மணிமாறன் சித்தார்த் முதல் பந்திலேயே அவுட்டானார். இதையடுத்து கடைசி விக்கெட்டாக ஜெகதீசன் 186 ரன்களில் ஆட்டமிழந்து, இரட்டை சதத்தை தவறவிட்டார். 

இதையடுத்து தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 424 ரன்களை குவித்தது. சவுராஷ்டிரா அணி, இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக்கிற்கு முன்பாகவே 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.