ரஞ்சி தொடரில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் விக்கெட் கீப்பர் ஆதித்ய தரே அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 129 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஆதித்ய தரே தான் மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

ஆதித்யாவிற்கு ஷாம்ஸ் முலானி ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். சிறப்பாக ஆடிய முலானி 87 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அபாரமாக ஆடிய ஆதித்ய தரே 154 ரன்களை குவித்தார். பின்வரிசையில் இறங்கிய ஷாஷான்க் அட்டர்டே தன் பங்கிற்கு 58 ரன்கள் அடிக்க, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்களை குவித்தது. தமிழ்நாடு அணியின் சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தமிழ்நாடு அணி, இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். முகுந்த் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார். சூர்யபிரகாஷ் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவருகிறார். மும்பை அணி 488 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை அடித்த நிலையில், தமிழ்நாடு அணி நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது.