பந்து வீச்சாளர்கள் வர வேண்டும்: தமிழ்நாடு ரஞ்சி டிராபி உங்கள் கையில் தான் இருக்கிறது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பந்து வீச்சாளர்களின் திறமைகளை கண்டறியும் தேர்வு வரும் மாதம் 9 ஆம் தேதி முதல் தேனி, ராமநாதபுரம் உள்பட 13 மாவட்டங்களில் நடக்க இருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்சிஏ திறமையாளர்கள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட்டை கொண்டு செல்லும் வகையிலும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை கண்டறியும், அவர்களது திறனை மேம்படுத்தவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 14 முதல் 24 வயதுக்கு உட்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான டேலண்ட் ஹண்ட் (Talent Hunt) வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. தொடக்க நிகழ்ச்சியாக வரும் 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் ஆரம்பமாகிறது.
இந்த Talent Hunt மூலமாக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அணியில் இடம் பெறும் வாய்பு வழங்கும் அளவிற்கு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான அறிமுக நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. அப்போது பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எத்தனையோ வீரர்கள் இருந்தும் அவர்களால் இந்திய அணிக்கு செல்ல முடியவில்லை என்று தொடர்ந்து விமர்சனம் தான் வந்து கொண்டு இருக்கிறது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியிருப்பார்கள். ரஞ்சி டிராபியில் மும்பை அணி 45 முறை வென்றுள்ளது. தமிழ்நாடு அணியும் வெற்றி பெற்றால், இந்திய அணிக்கு தமிழ்நாடு அணியின் மூலமாக நிறைய வீரர்கள் செல்வார்கள். இவ்வளவு ஏன், தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலமாக ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் கண்டறியப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும். சிவப்பு நிற பந்தில் சிறப்பாக செயல்பட பட்டி தொட்டியெங்குமிலிருந்து சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.