முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, ஐந்தாவது போட்டியில் திரிபுராவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திரிபுரா அணியின் முதல் 7 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கே வீழ்த்திவிட்டனர் தமிழ்நாடு பவுலர்கள். 

முதல் 7 வீரர்களில் ஐந்து வீரர்கள் டக் அவுட். 5.1 ஓவருக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட திரிபுரா அணியின் 8 மற்றும் 9ம் வரிசை பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து எஞ்சிய 15 ஓவர்களையும் ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 79 ரன்கள் அடித்தது. தமிழ்நாடு அணியின் சார்பில் ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும் டி.நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

வெறும் 80 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக பாபா அபரஜித்தும் வாஷிங்டன் சுந்தரும் இறங்கினர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட்டிங் ஆடினார். மறுமுனையில் அபரஜித் நிதானமாக ஆடினர். சுந்தர் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாசி, வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த முருகன் அஷ்வின் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 13வது ஓவரில் இலக்கை எட்டி தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.