கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி அபாரமாக ஆடிவருகிறது. அபினவ் முகுந்த், முரளி விஜய், பாபா அபரஜித், ஷாருக்கான், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே அபாரமாக ஆடிவருகின்றனர். ஒருவர் சரியாக ஆடாத போட்டியில் மற்றவர் அசத்திவிடுகிறார். 

ஆகமொத்தத்தில் ஒரு அணியாக அபாரமாக செயல்பட்டு, லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாடு அணி. லீக் சுற்றில் தமிழ்நாடு அணியின் கடைசி போட்டி குஜராத்துக்கு எதிராக நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 274 ரன்களை குவித்தது. 

தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்தும் முரளி விஜயும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 130 ரன்களை சேர்த்தனர். அபினவ் முகுந்த் 79 ரன்களில் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டார். 

முரளி விஜய்க்கு ஒத்துழைப்பு கொடுத்து சுந்தர் சிறப்பாக ஆடினார். நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய முரளி விஜய், 94 ரன்களில் ஆட்டமிழந்து 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார். பேட்டிங்கில் முன்வரிசையில் இறக்கப்பட்ட சுந்தர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஆடினார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், பாபா அபரஜித், ஷாருக்கான் ஆகியோர் சரியாக ஆடவில்லை. அபினவ், முரளி விஜய், சுந்தர் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி 274 ரன்களை குவித்தது. 

275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியை 196 ரன்களில் சுருட்டி 78 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.