உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழ்நாடு அணி முதல் போட்டியில் ஜார்க்கண்ட்டை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இன்று அசாமை எதிர்கொண்டது. 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அசாம் அணியில், எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவரில் 126 ரன்கள் மட்டுமே அடித்தது. தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர், முருகன் அஷ்வின் மற்றும் எம்.முகமது ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடினர். தொடக்கம் முதலே சீரான வேகத்தில் அடித்து ஆடினர். இருவருமே ஒரே வேகத்தில் ஆடிவந்த நிலையில், அரைசதம் அடித்தபின்னர் அடி வெளுத்துவாங்கினார் ஜெகதீசன். ஜெகதீசன் அதிரடியால் பதினைந்தாவது ஓவரிலேயே இலக்கை எட்டி தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜெகதீசன் 48 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார். ஹரி நிஷாந்த் 47 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆடிய 2 போட்டிகளிலுமே தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது.