Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup ஃபைனல் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்! வெற்றி யாருக்கு?

டி20 உலக கோப்பை ஃபைனலில் மோதும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

t20 world cup final new zealand vs australia match preview
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 13, 2021, 7:55 PM IST

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்கிறது. இறுதிப்போட்டியில் மோதும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பெரிய மேட்ச் வின்னர்கள் என்று யாரும் இல்லையென்றாலும், தேவையான போது யாராவது ஒருசில வீரர்கள் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச்செய்கின்றனர். அந்த அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கின்றனர். இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, வில்லியம்சன், மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம் என ஒவ்வொரு வீரருமே அணிக்கு தேவையானபோது வெகுண்டெழுந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதையெல்லாம் விட நியூசிலாந்து அணியின் பெரிய பலமே கேன் வில்லியம்சனின் கேப்டன்சி தான். எவ்வளவு பெரிய அணிக்கு எதிராகவும் தெளிவான திட்டங்களுடன் வருகிறார் வில்லியம்சன். திட்டங்களை நியூசிலாந்து வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். தெளிவான திட்டமிடலும், அவற்றை சரியாக செயல்படுத்துவதுமே நியூசிலாந்து அணியின் பெரிய பலம். ஆனால் காயம் காரணமாக டெவான் கான்வே ஃபைனலில் ஆடாதது ஒன்றே நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர் ஃபார்முக்கு வந்திருப்பது நல்ல விஷயம். மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய ஆல்ரவுண்டர்கள் இருவரும் சிறப்பாக ஆடுகின்றனர். ஸ்மித்தும் அவர்களுடன் இணைந்து, மேத்யூ வேடும் அரையிறுதியில் ஆடியதுபோல் ஆடினால், ஆஸ்திரேலிய அணி அசத்திவிடும். பவுலிங்கை பொறுத்தமட்டில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவருமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். ஸ்பின்னில் ஆடம் ஸாம்பா அசத்திவருகிறார்.

இவ்வாறாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்தாலும், இரு அணிகளுக்கு இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்பின் பவுலிங் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் நியூசிலாந்தின் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னெர் ஆகிய இருவரும் மிரட்டிவருகின்றனர். இந்த ஸ்பின் ஜோடியை சமாளிப்பதுதான் ஆஸி.,க்கு பெரிய சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவிடம் ஆடம் ஸாம்பா மட்டுமே ஸ்பின்னர். மேக்ஸ்வெல் பார்ட் டைம் பவுலர் தான்.

அதுமட்டுமல்லாது துபாயை பொறுத்தமட்டில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த உலக கோப்பை தொடரில் துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் 2வதாக பேட்டிங் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் டாஸ் மிக முக்கியம்.

இந்த ஃபைனலில் நியூசிலாந்து அணிக்கு ஆஸ்திரேலியாவை பழிதீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒன்று மீதமுள்ளது. 2015 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தித்தான் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. எனவே அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து களமிறங்குகிறது. அந்தவகையில், இரு அணிகளுமே வெற்றி பெறத்தான் ஆடும் என்றாலும் வெற்றி பெறுவதற்கான காரணமும் நோக்கமும் நியூசிலாந்து அணிக்கு வலுவாக உள்ளது.

நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே ஆடாததால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக டிம் சேஃபெர்ட் ஆடுவார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இந்த ஒரு கட்டாய மாற்றத்தைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அரையிறுதி போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios