ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 3 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது போட்டியில் முதல் வெற்றியை பெற்றது. 

இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் ஆடிய தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன், 3வது போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டார். கடைசி 2 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் ஆடாத நிலையில், முழங்கால் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்தே அவர் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் அபாரமாக பந்துவீசி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெத் ஓவரில் அபாரமாக செயல்பட்டு சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் நடராஜன். ஐபிஎல்லில் அபாரமாக விளையாடியதன் விளைவாக, இந்திய அணிக்காக ஆட வாய்ப்பு பெற்று, ஆஸி., சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தினார்.

இந்த சீசனை அவர் பெரிதும் எதிர்நோக்கியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகியுள்ளார். டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் வெரைட்டியான பந்துகளை வீசக்கூடிய நடராஜன் ஐபிஎல்லில் இருந்து விலகியிருப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு கண்டிப்பாகவே பெரும் பாதிப்பாக அமையும்.