தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். ரிஷப் பண்ட் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

ஆனால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளாமல் ரிஷப் பண்ட் சொதப்பிவருகிறார். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே படுமோசமாக செயல்பட்டுவருகிறார். ஆட்டத்துக்கு ஆட்டம் அனுபவத்தை பெற்று மேம்பட வேண்டிய ரிஷப் பண்ட், அதற்கு நேர்மாறாக நாளுக்கு நாள் மழுங்கிவருகிறார். 

வழக்கம்போலவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலுமே சொதப்பினார். பேட்டிங்கில் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாமல் திணறிய ரிஷப் பண்ட், தட்டுத்தடுமாறி 33 ரன்கள் அடித்தார். விக்கெட் கீப்பிங்கில் எளிய கேட்ச்சை தவறவிட்டார். விக்கெட் கீப்பிங்கின் அடிப்படையே பந்துகளை பிடிப்பதுதான். ஆனால் அவரோ, பந்துகளை கையில் பிடிப்பதேயில்லை. பந்தை தடுத்துவிட்டால் போதும் என்கிற மனநிலையுடன் விக்கெட் கீப்பிங் செய்கிறார். 

அதே பழக்கம் கேட்ச் பிடிக்கும்போதும் தொடர்வதால் கேட்ச்களை தவறவிடுகிறார். பேட்டிங்கில் சரியாக ஆடவில்லையென்றாலும் கூட, திரும்ப ஃபார்முக்கு வந்துவிடலாம். ஆனால் விக்கெட் கீப்பிங்கில் மோசம் என்றால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் விக்கெட் கீப்பர் சொதப்பினால், அது அணிக்கு பாதகமாக முடிந்துவிடும். 

அந்தவகையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கின் அடிப்படையே ஆட்டம் கண்டிருப்பதால், இதேநிலை தொடர்ந்தால் அவர் தூக்கியெறியப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். என்னதான் அணி நிர்வாகமும் கேப்டனும் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், அது ஓரளவுக்குத்தான் முடியும். சிறப்பாக ஆடி தனது உண்மையான திறமையை நிரூபிக்கவில்லையென்றால், வாய்ப்பு பறிபோகும். ஏனெனில் வாய்ப்புக்காக காத்திருக்கும் தகுதியான அடுத்த வீரரை நீண்ட காலத்திற்கு உட்கார வைத்திருக்க முடியாது. 

ஏற்கனவே ரிஷப் பண்ட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அவற்றை அவர் பயன்படுத்தி கொள்ளாததால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தவறிழைத்தாலே, ரசிகர்கள் தோனி தோனி என கத்தி அவரை கடுப்பேற்றுகின்றனர். விராட் கோலி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் கூட, ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை விடுவதாயில்லை. இரண்டாவது டி20 போட்டியில் கூட கிண்டலடித்தனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் செய்த விக்கெட் கீப்பிங் படுமோசம். இந்நிலையில், ஏசியாநெட் குழுமத்தின் ஆங்கில இணையதளமான மை நேஷனிற்கு அளித்த பேட்டியில் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி. 

ரிஷப் குறித்து பேசியுள்ள கிர்மானி, ஒரு விஷயத்தை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாரும் சச்சின் டெண்டுல்கர் ஆகிவிடமுடியாது. எனவே அண்டர் 19 லெவலில் இருந்து நேரடியாக இந்திய அணியில் எடுத்தால் இப்படித்தான் நடக்கும். திறமையான இளம் வீரர்களை போதுமான அளவு உள்நாட்டு போட்டிகளில் ஆடவைத்து, சரியான நபர்களிடம் இருந்து தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று, நன்றாக வளர்ந்த பிறகே இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும். 

அதைவிடுத்து அண்டர் 19 அணியில் ஆடிய திறமையான இளம் வீரர்களை நேரடியாக இந்திய அணியில் எடுப்பது சரியாக இருக்காது. ஏற்கனவே பார்த்திவ் படேலுக்கு இப்படித்தான் நடந்தது. அண்டர் 19 அணியில் ஆடிய பார்த்திவ் படேலை நேரடியாக இந்திய அணியில் எடுத்தனர். அவரால் சோபிக்க முடியாமல் போய்விட்டது. எனவே சரியாக ஆடாத வீரர்களை அணியிலிருந்து விடுவித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில், சிறப்பான முன்னாள் வீரர்களிடம் பயிற்சி எடுக்க அனுப்ப வேண்டும் என்று கிர்மானி தெரிவித்தார்.