இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவரும் நிலையில், தானும் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டபோது அதற்கான காரணமே தெரியாது என்று கூறியுள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி, தானும் அநீதியால் பாதிக்கப்பட்டவனே என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவின் பெயர் இடம்பெறவில்லை. சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தபோதிலும், ரிதிமான் சஹாவிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
இப்போது ரிஷப் பண்ட் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக திகழும் நிலையில், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கேஎஸ் பரத்தை மாற்று விக்கெட் கீப்பராக உருவாக்க முனைகிறது இந்திய அணி. இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, சீனியர் வீரர்களான ரஹானே, புஜாரா, சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இளம் வீரர்களை உருவாக்கி எதிர்காலத்திற்கான அணியை கட்டமைக்கவுள்ளதால், 37 வயதான ரிதிமான் சஹா இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்த காரணத்தை எடுத்துக்கூறி, இனிமேல் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடமில்லை என்பதை அவரிடமே பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரடியாக கூறிவிட்டார்.
பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் டிராவிட்டுடனான உரையாடல் குறித்து பேசிய ரிதிமான் சஹா, கங்குலி தனக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் ராகுல் டிராவிட் அணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ராகுல் டிராவிட் தன்னை, வேண்டுமென்றால் ஓய்வு அறிவித்துக்கொள் என்று கூறியதாகவும் தெரிவித்து சர்ச்சையை கிளப்பிவிட்டார்.
ரிதிமான் சஹா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி, ரிதிமான் சஹாவிற்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவுகிறது. நிறைய இளம் வீரர்கள் ஐபிஎல்லிலும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடுகின்றனர். எனவே அவருக்கு இடம் கிடைக்காமல் போகிறது. சிறந்த விக்கெட் கீப்பரான அவருக்கு அணியில் இடம் கிடைக்காதது சோகம் தான். கிரிக்கெட் வீரர்களின் கெரியரில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது சகஜம் தான். செலக்ஷன் கமிட்டி என்ன யோசித்தார்கள் என்று தெரியவில்லை. நானும் அநீதியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் யாருமே அதைப்பற்றி பேசவில்லை. இவ்வளவுக்கு நான் ஆடியபோது இவ்வளவு போட்டியெல்லாம் இல்லை. ஆனாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளிலிருந்து திடீரென ஓரங்கட்டப்பட்டேன் என்றார் சையத் கிர்மானி தெரிவித்தார்.
