பிக்பேஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று குயின்ஸ்லாந்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல்(47 பந்தில் 71 ரன்கள்) மற்றும் நிகோலஸ் பூரான்(26 பந்தில் 65 ரன்கள்) ஆகிய இருவரின் அதிரடியால் 193 ரன்களை குவித்தது. குறிப்பாக பூரானால் தான் இந்த ஸ்கோரை அடிக்க முடிந்தது. காட்டடி அடித்த பூரான், 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார்.

194 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கேப்டன் டேனியல் ஹியூக்ஸை தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் களத்தில் நிலைத்து நின்றதுடன், அடித்தும் ஆடிய டேனியல் ஹியூக்ஸ் 51 பந்தில் 96 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற ஹியூக்ஸ், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டதுடன், 9வது விக்கெட்டாக அவர் ஆட்டமிழந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனினும் அடுத்த பந்திலேயே லெக் பையால் 4 ரன்கள் கிடைத்ததால், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.