சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் போதிலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் சீசனிலும் சிறப்பாக ஆடினார். ஆனாலும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சூர்யகுமார் யாதவின் புறக்கணிப்பு பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியது. இதற்கிடையே, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட அடுத்த போட்டியில்(மும்பை இந்தியன்ஸ் vs ஆர்சிபி) கோலி சூர்யகுமாரை சீண்டினார். சூர்யகுமார் யாதவ் அதற்கெல்லாம் மசியாமல் கடைசிவரை களத்தில் நின்று மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கோலியின் சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் ரியாக்‌ஷனும் அவரது மன உறுதியான ஆட்டமும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், விராட் கோலியை பேப்பர் கேப்டன் என்று கிண்டலடித்து, ரோஹித் சர்மாவிற்கு கெத்தை ஏற்றும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த மீம்ஸை டுவிட்டரில் லைக் செய்தார் சூர்யகுமார் யாதவ். 

ரோஹித் சர்மாவிற்கும் விராட் கோலிக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சூர்யகுமாரின் செயல்பாடு அமைந்ததையடுத்து, சூர்யகுமாரின் செயலைக்கண்ட ரசிகர்கள், சூர்யகுமாரின் இந்த செயலால், இந்திய அணியில் வாய்ப்பை பெறுவது சிரமம் என்று கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவில் இருக்கும் விராட் கோலி, சிட்னியில் தீவிர பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, டெஸ்ட் பேட்டிங் பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருந்தார். அந்த டுவீட்டிற்கு, எனர்ஜி, சவுண்ட், கோலியின் ஆதிக்கத்தை காண காத்திருக்க முடியவில்லை என்று கோலிக்கு ஆதரவாக ரிப்ளை செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

 

கிண்டல் மீம்ஸுக்கு லைக்கும் போட்டுவிட்டு, சோப்பும் போட்டால் மசிவாரா கோலி...