இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடரிலிருந்து இரு அணிகளிலிருந்தும் தலா ஒரு மேட்ச் வின்னர் விலகியுள்ளார். இந்திய அணிக்குத்தான் பெரிய இழப்பு. 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடவுள்ளது இந்திய அணி.

இந்தியா - இலங்கை இடையே நாளை(24ம் தேதி) லக்னோவில் முதல் டி20 போட்டியும், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அடுத்த 2 டி20 போட்டிகள் தர்மசாலாவிலும் நடக்கின்றன.

நாளை முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியிலிருந்து 2 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். காயம் காரணமாக ஏற்கனவே தீபக் சாஹர் விலகிய நிலையில், Hairline காயம் காரணமாக சூர்யகுமார் யாதவும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ். நல்ல ஃபார்மில் அவர் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த நிலையில், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் முக்கியமான வீரர். இந்நிலையில், அவரும் காயத்தால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் இழப்பு. அவர் விலகியதால் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு மாற்று வீரரை பிசிசிஐ இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியிலும் ஒரு மிகச்சிறந்த வீரர் இந்த டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர ஸ்பின்னரும், ஆல்ரவுண்டருமான வனிந்து ஹசரங்கா இன்னும் கொரோனாவிலிருந்து குணமடையாததால் அவரும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.