ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஸ்கே ஆகிய அணிகள் வெற்றிகரமான அணிகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இவற்றிற்கு அடுத்ததாக கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் வெற்றிகரமான நல்ல அணிகளாக திகழ்கின்றன. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2 சீசன்களாக கேன் வில்லியம்சனின் தலைமையில் சிறப்பாக ஆடிவருகிறது. 2018 சீசனில் இறுதி போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று கோப்பையை இழந்த சன்ரைசர்ஸ் அணி, 2019 சீசனில் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடள்ஸிடம் தோற்று வெளியேறியது. இந்நிலையில், அணிக்கு புது உத்வேகம் கொடுக்க நினைத்த சன்ரைசர்ஸ் அணி, டாம் மூடி நீக்கப்பட்டு, டிரெவர் பேலிஸ் புதிய தலைமை பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹேடின் நியமிக்கப்பட்டுள்ளார். பிராட் ஹேடின் ஐபிஎல்லில் 2011 சீசனில் மட்டும்தான் ஆடினார். அந்த சீசனில் கேகேஆர் அணியில் ஆடினார். அதன்பின்னர் ஐபிஎல்லில் ஆடவில்லை. 

ஹேடின், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிரெவர் பேலிஸுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஹேடின் தலைமையிலான சிட்னி சிக்ஸர்ஸ் அணி 2012ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கை வென்றபோது அந்த அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது பேலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.