கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங்கிற்கு நிகராக ஃபீல்டிங் மிக மிக முக்கியம். ஒரு வீரர் 50 ரன்கள் அடிப்பதும், நல்ல ஃபார்மில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேனை அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்வதும் ஒன்றுதான்.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வீரர்களின் ஃபிட்னெஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால்தான் ஃபீல்டிங் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

ஜாண்டி ரோட்ஸ் உலகின் தலைசிறந்த ஃபீல்டராக திகழ்ந்தார். பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸ், பாண்டிங் என ஒவ்வொருவருமே சிறந்த ஃபீல்டராக திகழ்ந்தனர். ஆனால் அப்போதெல்லாம் இந்திய அணியில் ஃபீல்டிங் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் மட்டுமே அசாத்தியமான கேட்ச்களை பிடிக்கக்கூடிய அபாரமான ஃபீல்டர்களாக திகழ்ந்தார்கள்.

ஆனால் அதன்பின்னர் தோனி கேப்டனான பிறகு வீரர்களின் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தோனி தலைமையிலான அணியில் ரெய்னாவும் ஜடேஜாவும் சிறந்த ஃபீல்டர்களாக உருவெடுத்தார்கள். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, மனீஷ் பாண்டே, ரஹானே ஆகியோரும் சிறந்த ஃபீல்டர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட இந்திய அணியின் ஃபீல்டிங், இப்போது மிகச்சிறப்பாக உள்ளது. ஃபீல்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்திய அணி உள்ளது.

இந்நிலையில், மிகச்சிறந்த ஃபீல்டரான ரெய்னா, 30 யார்டு வட்டத்துக்குள் ஃபீல்டிங் செய்ய சிறந்த 5 ஃபீல்டர்களை தேர்வு செய்துள்ளார். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார் ரெய்னா. கிரிக்பஸ் இணையதளத்தில் ஹர்ஷா போக்ளேவிற்கு அளித்த பேட்டியில், வட்டத்துக்குள் ஃபீல்டிங் செய்ய சிறந்த 5 ஃபீல்டர்களை தேர்வு செய்துள்ளார்.

ஜாண்டி ரோட்ஸ், ரிக்கி பாண்டிங், காலிங்வுட், ஹெர்ஷல் கிப்ஸ், யுவராஜ் சிங், ஜடேஜா, கோலி, டிவில்லியர்ஸ், மார்டின் கப்டில், மேக்ஸ்வெல் ஆகிய 10 வீரர்களில், 30 யார்டு வட்டத்துக்குள் ஃபீல்டிங் செய்ய 5 சிறந்த ஃபீல்டர்களை தேர்வு செய்யும்படி ரெய்னாவிடம் கேட்கப்பட்டது. இந்த 10 பேருமே ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்கள்; எந்த ஃபீல்டிங் நிலையிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர்கள். இந்த கடினமான கேள்விக்கு ரெய்னா மிகச்சிறப்பாக ஃபீல்டர்களை தேர்வு செய்து பதிலளித்துள்ளார்.

பேக்வார்டு பாயிண்ட் திசையில் ஜாண்டி ரோட்ஸ், கவர் திசையில் டிவில்லியர்ஸ், மிட் ஆன் திசையில் யுவராஜ் சிங், மிட் ஆஃபில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மிட் விக்கெட் திசைக்கு பாண்டிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

கோலி, ஹெர்ஷல் கிப்ஸ், பால் காலிங்வுட், மேக்ஸ்வெல், மார்டின் கப்டில் ஆகிய ஐவரையும் ரெய்னா புறக்கணித்துள்ளார்.