இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் சுரேஷ் ரெய்னா. தல என ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படும் தோனி தலைமையிலான இந்திய அணியில் அவரது தளபதியாக திகழ்ந்தவர். 

2011 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோது அதில் முக்கிய பங்காற்றினார். ஐபிஎல்லிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் நிரந்தர வீரராக திகழ்ந்துவருகிறார். கோலி கேப்டனான பிறகு இந்திய ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

2018ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பின்னர் இந்திய அணியில் ரெய்னா ஆடவில்லை. எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ரெய்னா, கடந்த சில மாதங்களாகவே முழு உடற்தகுதியில்லாமல் இருந்துவந்தார். 

இந்நிலையில், அவருக்கு இடது முழங்கால் பகுதியில் பிரச்னை இருந்துவந்த நிலையில், அவருக்கு அந்த காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4-6 வாரங்களில் முழு குணமடைந்துவிடுவார் எனவும் பிசிசிஐ டுவீட் செய்துள்ளது. 

சுரேஷ் ரெய்னாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைந்து முழு உடற்தகுதியை பெற வேண்டுமென ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்.