மும்பையில் இரவு கிளப்பில் கொரோனா நெறிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ரெய்னா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர். 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த ரெய்னா, 33 வயதிலேயே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லிலும் கடந்த சீசனில் ஆடவில்லை. அடுத்த சீசனுக்காக தீவிரமாக தயாராகிவருகிறார்.
இந்நிலையில், மும்பையில் ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள கிளப் ஒன்றில், தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் பாடகர் குரு ரந்த்வா ஆகியோருடன் கலந்துகொண்டார். கொரோனா நெறிமுறைகளை மீறி கிளப்பில் கூட்டம் சேர்ந்ததற்காக ரெய்னா, குரு ரந்த்வா உள்ளிட்ட 34 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
ஐபிசி சட்டப்பிரிவுகள் 188, 269, 34 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுரேஷ் ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தேசியளவில் செய்தி ஆன நிலையில், இதுதொடர்பாக ரெய்னா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ரெய்னா ஒரு ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்தார். ஷூட்டிங் முடிய இரவு அதிக நேரமானதால், அவர் டெல்லிக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன், விரைவான இரவு உணவிற்கு அழைக்கப்பட்டார் ரெய்னா. உள்ளூர் நெறிமுறைகள் தெரியாமல், இரவு உணவிற்கு சென்றுவிட்டார்.
போலீஸாரும் அதிகாரிகளும் செயல்முறைகளை விளக்கியதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் ரெய்னா. இந்த துரதிர்ஷ்டவசமான, தற்செயலாக நடந்த சம்பவத்திற்காக ரெய்னா மிகவும் வருந்தினார். நாட்டின் சட்ட, திட்டங்கள், விதிமுறைகளை எப்போதுமே மிகவும் கண்டிப்புடன் பின்பற்றும் ரெய்னா, இனியும் அதை தொடர்வார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 22, 2020, 4:50 PM IST