அனைத்து ஐபிஎல் அணிகளும் சில வீரர்களை கழட்டிவிட்டதுடன் சில வீரர்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டுள்ளனர். ரஹானே, அஷ்வின் போன்ற பெரிய வீரர்களே அந்தந்த அணிகளால் கழட்டிவிடப்பட்டுள்ளனர். அந்த வகையில், சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிட்ட வீரர்களை பார்ப்போம். 

சன்ரைசர்ஸ் அணி மார்டின் கப்டில், யூசுஃப் பதான், ஷகிப் அல் ஹசன், ரிக்கி பூய், தீபக் ஹூடா ஆகிய 5 வீரர்களையும் கழட்டிவிட்டுள்ளது. யூசுஃப் பதான் 2018 சீசனில் சரியாக ஆடவில்லை. ஆனால் கடந்த சீசனில் ஓரளவிற்கு நன்றாகவே ஆடினார். ஆனாலும் அவர் பெரியளவில் ஆடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தரக்கூடிய அல்லது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை.

நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் கடந்த சீசனில் சரியாகவே ஆடவில்லை. அவர் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதிலும் பெரிதாக ஆடவில்லை. வெறும் 80 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் கடந்த சீசனுக்கு இடையே, இங்கிலாந்து அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவை அந்த அணி எடுத்தது. அவரும் வார்னருடன் இணைந்து எதிரணிகளின் பவுலிங்கை பொளந்து கட்டிவிட்டார். 

அடுத்த சீசனில் பேர்ஸ்டோ முழுவதும் ஆடுவார் என்பதால் மார்டின் கப்டிலின் சேவை சன்ரைசர்ஸ் அணிக்கு தேவைப்பட போவதில்லை. அதனால் அவரையும் கழட்டிவிட்டுள்ளது. சூதாட்ட சர்ச்சையில் தடையில் இருக்கும் ஷகிப் அல் ஹசன் கழட்டிவிடப்பட்டதில் ஆச்சரியமில்லை. இவர்கள் தவிர தீபக் ஹூடா மற்றும் ரிக்கி பூய் ஆகியோரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர். 

கடந்த இரண்டு சீசன்களிலும், மிகக்குறைந்த ஸ்கோரைக்கூட, எதிரணியை அடிக்கவிடாத அளவிற்கு சன்ரைசர்ஸ் பவுலர்கள் அபாரமாக பந்துவீசிவருவதால், பவுலர்கள் யாரையும் சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிடவில்லை. 

சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிட்ட வீரர்கள்:

மார்டின் கப்டில், யூசுஃப் பதான், ஷகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, ரிக்கி பூய். 

சன்ரைசர்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:

கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ரஷீத் கான், முகமது நபி, அபிஷேக் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, ரிதிமான் சஹா, கோஸ்வாமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், ஷபாஸ் நதீம், பில்லி ஸ்டேன்லேக், பாசில் தம்பி, டி.நடராஜன்.