ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிலே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எஞ்சிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி கிடைத்தாலே அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். 

சன்ரைசர்ஸ் அணியும் நல்ல ரன்ரேட்டுடன் இருப்பதால் அந்த அணியும் ஒரு வெற்றி பெற்றாலே ரன்ரேட்டின் அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும். இந்நிலையில், முக்கியமான கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளும் வெற்றி கட்டாயத்துடன் இன்று மோதுகின்றன. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனெனில் அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணியை எதிர்கொள்கிறது. வலுவான கேகேஆர் அணியை வீழ்த்துவது கடினம். பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, கடைசி போட்டிவரை செல்வது பிளே ஆஃப் வாய்ப்பை கடினமாக்கும். அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி, மும்பைக்கு எதிராக தோற்றாலும் கூட, அடுத்த போட்டி ஆர்சிபி உடன் என்பதால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இப்படி முக்கியமான சூழலில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸும் இன்று மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் இந்த சீசனில் பெரும்பாலான வெற்றிகளுக்கு காரணமானவருமான டேவிட் வார்னர், உலக கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணியில் இணைவதற்காக சென்றுவிட்டார். எனவே அவர் இல்லாதது அணிக்கு பலத்த அடி. 

12 இன்னிங்ஸ்களில் 8 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 692 ரன்களை குவித்து, இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக வார்னர் உள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்காக பல அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்த வார்னர், அந்த அணியில் இல்லாதது பெரிய இழப்புதான். அதுவும் மும்பை இந்தியன்ஸ் மாதிரியான வலுவான அணிக்கு எதிராக அவர் இல்லாமல் போனது பேரிழப்பு. 

இந்நிலையில், வார்னருக்கு பதிலாக யார் தொடக்க வீரராக களமிறங்கப்போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, டேவிட் வார்னர் இந்த சீசனில் அபாரமாக ஆடினார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்புதான். அதேநேரத்தில் வார்னர் இல்லாமலேயே கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு சென்றோம். வில்லியம்சனுக்கு கடந்த சீசன் சிறப்பாக அமைந்தது. வார்னர் இல்லாவிட்டாலும் எங்கள் அணியில் அவருக்கு மாற்றாக சில ஆப்சன்கள் உள்ளன. மார்டின் கப்டில் இருக்கிறார். மார்டின் கப்டில் சிறந்த தொடக்க வீரர். அதேபோல பில்லி ஸ்டேன்லேக்கையும் சேர்ப்பது குறித்தும் பரிசீலித்துவருகிறோம் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.