வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் 13 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் சுனில் நரைன். 

வெஸட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சுனில் நரைன், ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார்.

மாயாஜால ஸ்பின் பவுலிங், அதிரடி பேட்டிங் என சிறந்த ஆல்ரவுண்டரான சுனில் நரைன், ஃப்ரான்சைஸி அணிகளால் மிகவும் விரும்பப்படுபவர்.

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக ஆடிவரும் சுனில் நரைன், 13 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் சாட்டாக்ரோம் சேலஞ்சர்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது.

149 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய விக்டோரியன்ஸ் அணி, சுனில் நரைனின் சாதனை அரைசதத்தால் 13வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய விக்டோரியன்ஸ் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், 13 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த சுனில் நரைன் 16 பந்தில் 57 ரன்கள் அடித்தார். அவரது அதிரடியால் எளிதாக வெற்றி பெற்ற விக்டோரியன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

13 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் தொடர்கள்) 2வது அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுனில் நரைன்.

Scroll to load tweet…

யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல் மற்றும் ஹஸ்ரதுல்லா ஸேஸாய் ஆகிய மூவருமே 12 பந்தில் அரைசதம் அடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் 13 பந்தில் அரைசதம் அடித்த வீரராக இங்கிலாந்தின் டிரெஸ்கோத்திக் இருந்துவந்த நிலையில், அவருடன் சுனில் நரைனும் இப்போது இணைந்துள்ளார்.