இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாருமே இல்லாமல் ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடவுள்ளார். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் காயத்தால் ஆடாத ரோஹித் சர்மா, குவாரண்டினை முடித்துவிட்டு, 3வது போட்டிக்கு தயாராகிவிட்டார். 3வது போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவதால், அவுருடன் மற்றொரு தொடக்க வீரராக மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

ஷுப்மன் கில் அறிமுக போட்டியிலேயே மிகச்சிறப்பாகவும் பொறுப்புடனும் ஆடி அசத்திய நிலையில், அடுத்த போட்டியில் மயன்க், கில் இருவரில் யார் தொடக்க வீரர் என்ற விவாதம் நடந்துவருகிறது. இதுதொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், என்னுடைய சாய்ஸ் மயன்க் அகர்வால் தான். அவர் கடந்த 2 போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் தரமான பேட்ஸ்மேன். எனவே அவரே ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும். ஷுப்மன் டாப் ஆர்டரில் நன்றாக பேட்டிங் ஆடியிருந்தாலும் கூட, அவர் ஐந்தாம் வரிசையில் ஆடலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.