IPL 2023: நல்லா பந்துவீசிய மோஹித் சர்மாவின் ரிதத்தை கெடுத்ததுதான் GT-யின் தோல்விக்கு காரணம் - கவாஸ்கர்
ஐபிஎல் 16வது சீசனின் ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸ் தோல்விக்கு, மோஹித் சர்மா நன்றாக பந்துவீசிய போது அவரை இடையூறு செய்ததுதான் பெரிய தவறு என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஐபிஎல்லில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸுடன் பகிர்ந்தது சிஎஸ்கே அணி.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவரில் 214 ரன்களை குவித்தது.
215 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட தொடங்கியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. சில மணி நேரம் மழை நீடித்ததால் ஆட்டம் தடைபட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! ரவி சாஸ்திரியின் அதிரடி தேர்வு
171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி, 14 ஓவரில் 158 ரன்கள் அடித்திருந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும் முதல் 4 பந்துகளை அருமையாக வீசிய மோஹித் சர்மா, 3 ரன்கள் வழங்கினார். நன்றாக பந்துவீசிக்கொண்டிருந்த அவரிடம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்று பேசினார். கடைசி 2 பந்துகளை வீசுவதற்கு முன் டக் அவுட்டிலிருந்து பயிற்சியாளர் நெஹ்ரா, தண்ணீர் கொடுத்துவிடுவதைப் போல மெசேஜ் சொல்லியனுப்பினார். அதன்பின்னர் மோஹித் சர்மா வீசிய 2 பந்துகளையும் ஜடேஜா சிக்ஸரும் பவுண்டரியும் விளாச, சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
நன்றாக பந்துவீசிக்கொண்டிருந்த மோஹித் சர்மாவை இடையூறு செய்தது தான் தோல்விக்கு காரணம் என்று கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், முதல் 3-4 பந்துகளை மோஹித் சர்மா மிகச்சிறப்பாக வீசினார். அதன்பின்னர் மோஹித் சர்மாவுக்கு தண்ணீர் கொடுப்பது போல ஏதோ மெசேஜ் சொல்லியனுப்பப்பட்டது. கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரிடம் சென்று பேசினார். அதனால் தான் அவரது பவுலிங் ரிதம் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவரிடம் எதுவும் சொல்லியிருக்கக்கூடாது என்று கவாஸ்கர் விமர்சித்தார்.