Asianet News TamilAsianet News Tamil

IND vs SA: அவன் ஒருத்தனை தவிர வேற எவனும் சரியில்ல.. அதுதான் தோல்விக்கு காரணம்..! கவாஸ்கர் கடும் விளாசல்

புவனேஷ்வர் குமாரைத் தவிர இந்திய அணியில் விக்கெட் வீழ்த்தும் பவுலரே கிடையாது என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விளாசியுள்ளார்.
 

sunil gavaskar reveals the reason for team india defeat against south africa in first 2 t20 matches
Author
Chennai, First Published Jun 13, 2022, 3:03 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகினார். அதனால் ரிஷப் பண்ட் இந்த தொடரில் கேப்டன்சி செய்துவருகிறார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் 211 ரன்களை குவித்தும் கூட, 212 ரன்கள் என்ற கடினமான இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசாததுதான் அந்த தோல்விக்கு காரணம். ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியும் சுமாராகவே இருந்தது.

2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 148 ரன்கள் அடித்த இந்திய அணி 149 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. புவனேஷ்வர் குமார் பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை பவர்ப்ளேயிலேயே வீழ்த்தினார். கடைசியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி மொத்தமாக 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் அவருக்கு மற்ற பவுலர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவரில் 49 ரன்களை வாரி வழங்கினார். ஹர்ஷல் படேல் 3 ஓவரில் 17 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆவேஷ் கான் நன்றாகபந்துவீசி 3 ஓவரில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும், அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஹர்திக் பாண்டியாவும் விக்கெட் வீழ்த்தவில்லை.

புவனேஷ்வர் குமாருடன் இணைந்து மற்றபவுலர்களும் ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கக்கூடும். விக்கெட் வீழ்த்தவல்ல பவுலர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் பெரிய பிரச்னை என்னவென்றால், புவனேஷ்வர் குமாரைத் தவிர விக்கெட் வீழ்த்தும் பவுலரே கிடையாது. விக்கெட் வீழ்த்தினால் தான் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். முதல் 2 டி20 போட்டிகளிலும் புவனேஷ்வர் குமாரைத்தவிர வேறு யாரும் விக்கெட் வீழ்த்தவில்லை. அவர் ஒருவர் தான் பந்தை ஸ்விங் செய்கிறார். அதனால் தான் 211 ரன்கள் அடித்தும் இந்திய அணி தோற்க நேரிட்டது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios