இந்தூர் பிட்ச்சுக்கு 3 டீமெரிட் புள்ளி..! Gabba பிட்ச்சுக்கு மட்டும் ஏன் கொடுக்கல..? ICC-யை அலறவிட்ட கவாஸ்கர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்த ஐசிசி, 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கிய நிலையில், ஐசிசியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் கவாஸ்கர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய ஆடுகளங்கள் இயல்பாகவே ஸ்பின்னிற்குத்தான் சாதகமாக இருக்கும். அது தெரிந்து அதற்கான தயாரிப்புகளுடன் இந்தியாவிற்கு வந்திருந்தாலும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, வாழ்வா சாவா என்ற 3வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடியது.
ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்
இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. அதை பயன்படுத்தி இந்திய வீரர்களை சொற்ப ரன்களுக்கு வீழ்த்தி 109 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது மட்டுமல்லாது, இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியை நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்தி 163 ரன்களுக்கு சுருட்டினார். 76 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் பலமான ஸ்பின்னிற்கு சாதகமாக இந்திய அணி ஆடுகளங்களை தயார் செய்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் இந்திய ஆடுகளங்களை விமர்சித்தனர். ஆனால் முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி, இந்தூர் டெஸ்ட்டில் சுதாரிப்புடன் ஆடி இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தூர் ஆடுகளத்தில் பந்து முதல் ஓவரிலிருந்தே திரும்பியதுடன், இரண்டே நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் ஆட்டம் முடிவடைந்ததால் இந்த ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐசிசி, இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்ததுடன், 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.
ஐசிசியின் செயலால் கடும் அதிருப்தியடைந்த சுனில் கவாஸ்கர், ஐசிசி மதிப்பீட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சுனில் கவாஸ்கர், இந்தூர் ஆடுகளத்திற்கு ஐசிசி 3 டீமெரிட் புள்ளிகளை வழங்கியது கொஞ்சம் கடினமான முடிவு. பந்து நன்றாக திரும்பியது உண்மைதான். ஆனால் அது அபாயகரமானதாக இல்லை. 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடிக்கிறது என்றால் அந்த பிட்ச் நன்றாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. கடந்த ஆண்டு நவம்பரில் பிரிஸ்பேனில் (Gabba) நடந்த டெஸ்ட் போட்டி வெறும் இரண்டே நாளில் முடிந்தது. அந்த பிட்ச்சிற்கு எத்தனை டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டன என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.