டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றால் 2048ல் பாபர் அசாம் பிரதமர் ஆகிவிடுவார் - சுனில் கவாஸ்கர்
நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் நிகழ்வுகள், 1992 ஒருநாள் உலக கோப்பை நிகழ்வுகளை ஒத்திருக்கிறது என்று பேசப்படும் நிலையில், அப்படியென்றால் இந்த டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் ஜெயித்தால் 2048ல் பாபர் அசாம் பிரதமர் ஆகிவிடுவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன. வரும் 13ம் தேதி மெல்பர்னில் இறுதிப்போட்டி நடக்கிறது.
இந்த டி20 உலக கோப்பை தொடரின் அப்படியே 1992 ஒருநாள் உலக கோப்பையை ஒத்திருக்கின்றன. எனவே பாகிஸ்தான் தான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியதிலிருந்து பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
எதனால் இந்த டி20 உலக கோப்பை 1992 ஒருநாள் உலக கோப்பையை போன்று நடக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
1. 1992 ஒருநாள் உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த உலக கோப்பையும் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
2. அந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. இந்த தொடரிலும் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவிடம் தோற்றது.
3. 1992 ஒருநாள் உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான தோல்விக்கு பின் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோலத்தான் இந்த உலக கோப்பையிலும், இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பின் 3 தொடர் வெற்றிகளை பெற்று, கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடம் தோற்றதால் அரையிறுதிக்கு முன்னேறியது.
4. 1992 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறியது. அதேபோலவே இந்த உலக கோப்பையின் அரையிறுதியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
5. 1992 உலக கோப்பையில் ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது. இந்த உலக கோப்பை ஃபைனலிலும் இங்கிலாந்தைத்தான் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
எனவே 1992 உலக கோப்பையை போன்றே இந்த உலக கோப்பையும் நடப்பதாக நம்புகின்றனர் ரசிகர்கள். அதனால் பாகிஸ்தான் தான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், அப்படி இந்த உலக கோப்பையை பாகிஸ்தான் ஜெயித்தால் 2048ல் பாபர் அசாம் பாகிஸ்தான் பிரதமர் ஆகிவிடுவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
உன் வேலையை ஒழுங்கா செய்யாமல் பவுலர்கள் மீது பழி போடுற..! ரோஹித்தை கடுமையாக விளாசிய வீரேந்திர சேவாக்
1992ல் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இம்ரான் கான், 26 ஆண்டுகள் கழித்து 2018ல் பாகிஸ்தான் பிரதமர் ஆனார். இந்த உலக கோப்பையை பாகிஸ்தான் ஜெயித்தால், அதேபோல 26 ஆண்டுகள் கழித்து கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் பிரதமர் ஆகிவிடுவார் என்ற கணக்கில் கவாஸ்கர் ஜாலியாக இந்த கருத்தை கூறியுள்ளார்.