இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. 

குறிப்பாக தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டனர். மயன்க் அகர்வாலாவது பரவாயில்லை; பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான விதம் அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது. 

பிரித்வி ஷாவின் தற்போதைய மோசமான ஃபார்ம் மற்றும் மோசமான பேட்டிங் டெக்னிக்கை சுட்டிக்காட்டி, அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை அடுத்த போட்டியில் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

விராட் கோலி இனிவரும் போட்டிகளில் ஆடவில்லை என்பதால், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய அவசியம் இருப்பதால், அவரை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. அதனால் தான் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்கலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால், கவாஸ்கர், பிரித்வி ஷாவிற்கு பதிலாக கேஎல் ராகுலை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ஷுப்மன் கில்லை மிடில் ஆர்டரில்(ஐந்து அல்லது ஆறு) இறக்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.