Asianet News TamilAsianet News Tamil

அதிரடி வீரரை தவறான பேட்டிங் ஆர்டரில் அனுப்புறீங்க! அந்த பையனுக்கு ஃபினிஷர் ரோல் தான் சரியா இருக்கும்- கவாஸ்கர்

இந்திய அணியின் ஃபினிஷராக தகுதியான வீரர் யார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

sunil gavaskar names rishabh pant will be the best option for finisher role in odi
Author
Chennai, First Published Jan 22, 2022, 3:46 PM IST

கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்ட முதல் ஒருநாள் தொடரிலேயே தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் ராகுலின் கேப்டன்சியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அடுத்ததாக பிப்வரி 6ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்பிவிடுவார் என்பதால், அவர் கேப்டன்சி செய்வார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை இன்னும் இருப்பதும், சில ரோல்கள் உறுதி செய்யப்படாததும் அம்பலப்பட்டது. 

சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த காலங்களில் 4ம் வரிசை வீரராக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயர் 5ம் வரிசைக்கு தள்ளப்பட்டு ரிஷப் பண்ட் 4ம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். தோனிக்கு பிறகு இந்திய அணியின் ஃபினிஷராக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக இந்திய அணியில் அவரது இடத்தையே கிட்டத்தட்ட இழந்துவிட்டார். இனிமேல் அவர் ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பது கடும் சவால்.

எனவே ரிஷப் பண்ட்டுக்குத்தான் ஃபினிஷர் ரோல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும், ஃபினிஷர் ரோலுக்கான 6ம் வரிசையில் வெங்கடேஷ் ஐயரும் இறக்கப்பட்டனர். 

இந்நிலையில், ஃபினிஷர் ரோல் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் தான் ஃபினிஷர் ரோலுக்கு சரியானவர் என்று கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ரிஷப் பண்ட் அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் 4ம் வரிசையில் இறக்கப்படுகிறார். பொறுமையும் ஆக்ரோஷமும் கலந்த கலவையான வீரராக அவர் இல்லை. எனவே ரிஷப் பண்ட்டை 6ம் வரிசையில் இறக்கி அவரை ஒரு ஃபினிஷராக உருவாக்குவதே சரியான ஐடியா. சூழ்நிலையை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடக்கூடிய வீரர் ரிஷப் பண்ட். எனவே அவர் ஃபினிஷிங் ரோலுக்குத்தான் சரியான வீரர் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios