ICC WTC: இப்பதான் டி20-யில் ஆடியிருக்கீங்க.. அதனால் ரொம்ப கவனமா இருங்க! இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் அறிவுரை
ஐபிஎல்லை முடித்துவிட்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடப்போகும் இந்திய வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் முடிவடைந்த நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்குகிறது.
ஐபிஎல்லில் ஆடிவிட்டு இந்திய வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆட இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கடந்த முறை ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. லண்டன் ஓவல் ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் பேட்டிங் ஆட மிகவும் சவாலாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 மாதங்களாக ஆடிவிட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சுனில் கவாஸ்கர் முக்கியமான அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், பேட் ஸ்பீட் மிக முக்கியம். டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் பேட் ஸ்பீட் வேகமாக இருந்திருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட் வேகம் மெதுவாக இருக்க வேண்டும். ஓவல் ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகும் என்பதால் பந்தை நன்றாக வரவிட்டு ஆட வேண்டும். எனவே கண்ட்ரோல் மிக முக்கியம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.